கட்டுரைகள்

 நொறுங்கிய குடியரசு

அருந்ததிராய்

தமிழில்

க.பூரணச் சந்திரன்

காலச்சுவடு பதிப்பகம்

191 பக்கங்கள்

விலை ரூபாய் 225



பழங்குடியினரின் நலன் சார்ந்த மூன்று கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. "தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மாவோயிஸ்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல்" என்று அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரமும் மாவோயிஸ்டுகள் மீது அதே போன்ற பார்வையைக் கொண்டிருந்தவர்.


நாகரிகமான மனித வாழ்வில், ஜனநாயக தேசத்தில் பழங்குடியினர் மீதான வலுக்கட்டாயமான இடப்பெயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மிகவும் வருத்தம் அளிப்பவை. சமகால சகிப்பின்மை, மதவாதம் கோலோச்சும் சூழலிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் பெரும் அதிர்ச்சியை அளித்தும், சாமானிய மனசாட்சியை தட்டியெழுப்புவதாகவும் அமைகின்றன.


 பழங்குடியினரால் கடும் உழைப்புடன் வனத்திலிருந்து சேகரிக்கப்படும் 'தேந்து' இலைகள் கட்டு ஒன்றுக்கு மூன்று பைசாவுக்கு அந்நாட்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்தபின் ஆறு பைசாவாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பழங்குடியினர் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். சுரண்டிக் கொழுத்தவர்கள் கோடிகளில் புரள, அப்பாவி மக்களுக்கு மிஞ்சியது மிகமிக சாதாரணமான வாழ்வாதாரமே.


 வனங்களின் காவலர்களான பழங்குடியினர் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்பட்டதுடன், வாழ்விடங்களை விட்டு கருணையின்றி துரத்தப்பட்டுள்ளனர்.


 பாக்சைட் தாதுவினை வெட்டி சூறையாட மலைகள் அழிக்கப்படுகின்றன. ஒரு டன் அலுமினியம் தயாரிக்க 6 டன் பாக்ஸைட் தாது தேவைப்படுவதும், அத்தகைய  தயாரிப்புப் பணியை மேற்கொள்ள சுற்றுச்சூழலை பாதிக்காத வழிமுறைகள் ஏதுமில்லை என்பதும், இந்நூல் அளித்திடும் நுண்மையான தகவல்கள்.


 அலுமினியம் தயாரிப்புப் பணிகளின் போது மிக அதிக அளவில் நீரும் தேவைப்படுகிறது. இவ்வளவு பிரயத்தனத்துடன், உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளுக்கு இடையே உற்பத்தி செய்யப்படும் அலுமினியம் ஆயுதங்களைத் தயாரிக்க வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் காரணங்களுக்காக வளர்ச்சி அடையாத நாடுகளை அலுமினியத் தேவைக்கு குறி வைக்கின்றன வளர்ந்த நாடுகள். தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நம்மிடமே வணிகம் செய்யப்படுவதும் மற்றுமொரு கொடூரம்.


'தோழர்களுடன் ஒரு நடைப் பயணம்'கட்டுரை கானகத்திலேயே அலைந்து திரிந்தது போன்ற வாசிப்பு அனுபவத்தை அளித்தது. அறிவுச் சுடராகத் திகழும் அருந்ததிராய், மார்க்சிய சிந்தனையுடன், வியக்க வைக்கும் எழுத்தாற்றலும் பெற்றிருக்கிறார். அவரது தீர்க்கமான பார்வை, அரசு, அதிகார வர்க்கம் மீதான கடுமையான விமர்சனங்களை மட்டுமல்ல, மாவோயிஸ்டுகள் மீதான குறைகளையும் நடுநிலையுடன் முன் வைப்பவை.


 பாக்சைட் தாதுவிற்காக மலைகள் அழிக்கப்பட்டதும், அலுமினியத் தயாரிப்பு தேவைகளுக்கான நீர், மின்சாரம் போன்றவற்றிற்காக பெரும் அணைகள்  கட்டப்பட்டதும், எதிர்ப்பாளர்கள் மிகமிக சுலபமாக ஒடுக்கப்பட்டதும், பெரும் அதிர்ச்சி அளிப்பவை.


முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்தின் கொடுங்கரங்கள் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் வெள்ளந்தியான பழங்குடி மக்களை கருணையின்றி அழித்துவிடத் துடிக்கின்றன.


 மக்களின் பேராசையைத் தூண்டி விட எண்ணுகிறது அதிகாரவர்க்கம். பேராசை என்றால் என்னவென்றே அறியாத பழங்குடியினருக்கு தொலைக்காட்சியை அறிமுகம் செய்துவிட்டாலே போதுமானது, போன்ற செய்திகள் எல்லாம் இந்நூலில் இடம்பெறுகிறது.


 தீவிர செயல்பாட்டாளரான அருந்ததிராயின் அறச்சீற்றம் கட்டுரைகளில் விரவியுள்ளது. நூலைத் தமிழாக்கம் செய்த பூரணச்சந்திரனின் பணி மிகவும் சிறப்பானது.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்