கட்டுரைகள்
இதுதான் உங்கள் அடையாளமா?
தமிழ் சினிமா, நுண்கலைகள் குறித்த பார்வைகள்
அரவிந்தன்
காலச்சுவடு பதிப்பகம்
127 பக்கங்கள்
விலை ரூபாய் 140
தமிழ் சினிமா குறித்த 20 கட்டுரைகள் மற்றும் நுண்கலைகள் தொடர்பான மூன்று கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
கூர்ந்த அவதானிப்புகளின் வழியே எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் அவசியம் பார்த்தேயாக வேண்டிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை நமக்குத் தர வல்லவை.
பிரம்மிப்பூட்டும் அதியற்புதமான காட்சி ஊடகமான சினிமா, வணிக எதிர்பார்ப்புகளின் ஊடே சீரழிக்கப்படுவதையும், நம்பிக்கையளிக்கும் இளம் படைப்பாளிகள் ஓரிரண்டு படங்களுக்குப் பின் காணாமல் போய்விடுவதையும் இக்கட்டுரைகள் நடுநிலையுடன் விவாதிக்கின்றன.
விஷால் பரத்வாஜின் 'ஹைதர்', பிரம்மாவின் 'குற்றம் கடிதல், சார்லஸின் 'அழகு குட்டி செல்லம்' போன்ற படங்களை தவறவிட்டமை குறித்த குற்ற உணர்வை ஏற்படுத்திவிட்டன இப்படங்களைக் குறித்த கட்டுரைகள்.
பொதுவாக எம்ஜிஆர் குறித்த பார்வைகள் இருவிதமாக அமைந்திருக்கும். தெய்வ நிலைக்கு அவரை உயர்த்திவிடும் செயற்கையான பார்வை அவற்றுள் ஒன்று. குண்டடிபட்ட அவரது குரலைக் கிண்டல் செய்யும் பார்வைகள் மற்றொரு வகை.
'தனது திரை பிம்பத்தை தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர், அந்த பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காக தன் கலைவாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார்'.
அரவிந்தனின் மேற்கண்ட வரி, எம்ஜிஆர் குறித்த அவரது தீர்க்கமான பார்வையை மிகையின்றி கூறுவதுடன், பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த வெங்கட் சாமிநாதனின் 'எம்.ஜி.ஆர் - ஓர் உன்னதமான சம்பவம்' என்ற கட்டுரையையும் நினைவுபடுத்தி விட்டது.
வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படத்தைக் குறித்த கட்டுரை இரு முறை இடம் பெற்றுவிட்டது போன்று ஒரே மாதிரியான இரு கட்டுரைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
'ஜோக்கர்' திரைப்படத்தை மிக நுண்மையாக அலசுகிறது மற்றுமொரு கட்டுரை.
நுட்பமான பார்வைகளை அளிக்கும் ப்ரஸன்ன ராமசாமியின் 3 நாடகங்களைக் குறித்த கட்டுரைகளும் மிகவும் சிறப்பானவை.
'பரந்து விரிந்த ராஜ்யம் இருக்கையில் வனத்தை அழித்து நாட்டை அமைக்க வேண்டிய அவசியம்தான் என்ன?'
மகாபாரதத்தில் பாண்டவர்கள் காண்டவ வனத்தை அழித்து இந்திரப் பிரஸ்தமாக மாற்றுகையில் எழும் எளிய, நியாயமான கேள்விதான் இது.
Comments
Post a Comment