கல்வி

 புத்தாக்க வாழ்வியல் கல்வி 

சுனேசபுரோ மகிகுச்சி

நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு 

 256 பக்கங்கள்

 விலை ரூபாய் 205



ஜப்பானியக் கல்வியாளர் மகிகுச்சியின் கருத்துகளும் ஆலோசனைகளும் ஐந்து தலைப்புகளில் மிக விரிவாக டேல் எம் பெத்தேல் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ள நூல் இது. 


கற்றல் கற்பித்தல் சார்ந்தும், ஆசிரியப் பணி சார்ந்தும் மகிகுச்சி  தெரிவிக்கும் கருத்துகள், வெளியாகி 100 ஆண்டுகள் ஆகிவிட்ட நூல் இது என்று எண்ணவே முடியாத அளவுக்கு செவ்வியல் தன்மையுடன் இந்நூலை எண்ண வைப்பவை. 


கல்வியின் நோக்கமாக இன்பத்தை முன்னிறுத்துகையில் ஆசிரியர்களின் பணி சுலபமாவதை உணர்த்துகிறார் மகிகுச்சி.


மாணவர்களிடம் வலியுறுத்தப்படும் விழுமியங்கள் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்ற கருத்து இரண்டாவது பகுதியில் இடம்பெறுகிறது.


 தீர்க்கமான, சமரசமற்ற சிந்தனைகளுடன் காலம் முழுக்கப் போராடியிருக்கிறார் மகிகுச்சி. 


ஜப்பானிய உயர்மட்ட அதிகார பீடங்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டும், பழிவாங்கப்பட்டும், கல்வி கற்பிக்கக் கூடாது என்ற தடைவிதிக்கப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலேயே உயிர் நீத்திருக்கிறார்.


 தட்டையான சிந்தனை நிரம்பியவர்களால் மகிகுச்சி போன்ற தீர்க்கதரிசிகள் புறக்கணிக்கப்பட்டதில் வியப்பேதும் இல்லை.


 மிகமிகக் குறுகிய மனித வாழ்வில் பிறர் நலன் நாடும் பெரும்பணியாகிய ஆசிரியப் பணியில் மகிழ்ச்சியுடன் நிறைவாக செயல்படும் வகையில் தனது கருத்துக்களை தெளிவாக முன் வைக்கிறார் மகிகுச்சி.


//பொருள் நலநோக்கம் கொண்ட வாழ்க்கை இறுதியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்ற உண்மையை உணரத் தொடங்கும்போது செல்வத்தை திரட்டுவதில் நம் வாழ்க்கையை விரயமாக்குவதைக் காட்டிலும் நம் உயிர்வாழ்க்கைக்கான ஆதாரங்களை அறிவதில் மனஅமைதி காணலாம்//


 மேற்கண்ட வரிகள் ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் சிந்திக்கத்தக்கவை.


இந்நூலினை மிகச் சிறப்பாக தமிழில் மொழி பெயர்த்திருக்கும் கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்கள் சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.


 ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும், ஒவ்வொரு ஆசிரியரின் இல்ல நூலகத்திலும் இடம்பெற வேண்டிய அற்புத நூல் இது.


 ஒவ்வொரு ஆசிரியரும் வாசித்தே ஆகவேண்டிய நூலும்கூட.

Comments

Popular posts from this blog

கவிதைகள்

கட்டுரைகள்

கட்டுரைகள்