அனுபவப் பதிவுகள்

பின்னகர்ந்த காலம் 

வண்ணநிலவன் 

காலச்சுவடு பதிப்பகம் 

359 பக்கங்கள்

விலை ரூபாய் 450



இளம்பருவ வறுமை வாழ்வை, போராட்டங்களை, எதிர்நீச்சல் இட்ட தருணங்களை பாசாங்கற்ற மொழியில் மிகையின்றி சொல்லியிருக்கிறார் வண்ணநிலவன்.


கலை இலக்கியத்தால் உந்தப்பட்ட மனத்தைக் கொண்டு வாழ்வாதாரம் குறித்த கவலைகளுடன் அவர் நடத்திய போராட்டங்கள் நீண்டவை.


தமிழகத்தின் இரட்டை நகரங்களாக அறியப்படும் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வண்ணநிலவனின் இளமைப் பருவம் கழிந்திருக்கிறது.


ஒளிவு மறைவற்ற வெளிப்படுத்துதல்களாக அவரது ஆரம்பகால வாழ்வின் பகுதிகளை நூலில் எடுத்துரைக்கிறார்.


இளம்பருவத்தில் மார்க்சிய ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். காலவோட்டத்தில் எந்த ஒரு அமைப்பிலும் அவரால் முழுமனதுடன் நீடிக்க இயலவில்லை.


வண்ண நிலவனின் ஜீவாதாரப் பயணம் வக்கீல் குமாஸ்தா என்ற அடையாளத்துடன் துவங்கி, பல பத்திரிகைகளில் உதவியாளராக பணியாற்றி, சீரான இடைவெளிகளில் ஒவ்வொரு வேலையையும் தொடர்ச்சியாக இழந்திருக்கிறார். 


வறுமைக் காலங்களில் தன்னை ஆதரித்த நண்பர்களின் பட்டியலை நூல் முழுவதிலும் வெளிப்படையாக தந்திருக்கிறார் வண்ணநிலவன். 

எங்கெல்லாமோ இட்டுச் சென்றிருந்த அவரது வாழ்வாதாரப் பயணம் துக்ளக் பத்திரிகையில் நிரந்தர வேலை என்ற அளவில் நிறைவடைந்து இருக்கிறது.


தற்போது அமெரிக்காவில் தனது மகனுடன் வசிப்பதாக சொல்பவர், வாழ்வில் சற்று மேம்பட்ட நிலையை அடைந்த கதையையும் இந்நூலில் சேர்த்திருக்கலாம். 


நிறைமாத கர்ப்பிணியான மனைவியுடன் மறைந்துவிட்ட தந்தையின் ஈமச்சடங்குக்காக சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு பேருந்தில் பயணித்தவர், அங்கு சென்று சேர்வதற்கு முன்னரே தந்தையின் ஈமச்சடங்குகள் நிறைவு பெற்றதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.


'ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உனதடிமை' என்ற வரியில் தொடங்கும் தாயுமானவரின் பாடலை நினைவுபடுத்துவதாகவே வண்ணநிலனின் வாழ்வு அமைந்திருக்கிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி மலர் ஒன்றில் 'நான்கு சகோதரிகள்' என்ற கட்டுரையை வாசித்தேன். வண்ணநிலவனுடன், வண்ணதாசன், கவிஞர்கள் கலாப்பிரியா, விக்ரமாதித்யன் ஆகியோர் இடம் பெற்றிருந்த கட்டுரை அது. தமிழ் இலக்கியத்திற்கு தாமிரபரணி அளித்த பொக்கிஷங்கள் இவர்கள் நால்வரும். 


பேருந்தில் செல்லும்போது, தான் கண்ட புலம்பெயர் மக்கள் 'எஸ்தர்' கதைக்காண கருவை அளித்ததாக கூறுகிறார். 


வக்கீல் குமஸ்தாவாக பணியாற்றிய காலத்தில் மீனவ சமூக மக்களிடையே நடைபெற்ற சச்சரவுகள் குறித்து அறிந்தபோது, 'கடல்புரத்தில்' நாவலை படைத்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ருத்ரய்யாவின் நட்பைப்  பெற்றதுடன் அவர் இயக்கிய முதல் படமான 'அவள் அப்படித்தான்' படத்திற்கு வசனமும் எழுதி இருக்கிறார். தொடர்ச்சியாக திரைப்படங்களின் வசனகர்த்தாவாகவே தனது வாழ்வை மாற்றிக்கொண்டு சற்று மேம்பட்ட நிலையை விரைவாகவே அவர் அடைந்திருக்க முடியும். அவருள் நிலை பெற்றிருந்த கலைஞன் அதற்கான வாய்ப்பை வழங்கவில்லை போலும்.


துக்ளக்கில் பணியாற்றிய காலங்களில் ஒரு சமயம் அதன் ஆசிரியர் 'சோ'வுடன் காஞ்சிப் பெரியவரை சந்திக்க சென்றபோது, நெடுஞ்சான்கிடையாக சோ அவரது காலில் விழுந்தபோதும், அருகிலேயே (தான் அது போன்று செய்யாமல்)  நின்றிருந்திருக்கிறார் வண்ணநிலவன்.

அவரது கலை மேதைமை அவரது கதைகள், நாவல்களில் மட்டுமின்றி அனுபவத் தொகுப்புகளாகவே இடம்பெறும் இந்நூலிலும் மிக அழகாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.















Comments

Popular posts from this blog

கவிதைகள்

நாவல்

நாவல்