கட்டுரைகள்
எங்கேயும் எப்போதும் எஸ்பிபி நினைவலைகள் தொகுப்பு அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 143 பக்கங்கள் 14 எழுத்தாளுமைகளின் கட்டுரைகள், எஸ்பிபி சரணின் நேர்காணல் அடங்கிய நூல் இது. ஒவ்வொருவரின் எழுத்திலும் எந்த ஒரு தரவும் 'கூறியதுகூறல்' வகையினதாக அமையவில்லை. அப்பெருங்கலைஞன் மீதான பிரம்மிப்பும், வற்றாத அன்பும் மட்டுமே எல்லா கட்டுரைகளிலும் பொதுவாக அமைந்துவிட்ட அம்சங்கள். காலச்சுவடு இதழில் முன்பே இடம்பெற்றுவிட்ட சில கட்டுரைகளைத் திரும்ப வாசித்த போதும் அலுப்பு ஏதும் தோன்றவில்லை. எழுத்தில் வடிக்கும் திறன் பெற்றிருப்பின் இதுபோன்ற லட்சக்கணக்கான கட்டுரைகள் எஸ்பிபி அபிமானிகளிடமிருந்து குவிந்திருக்கும். 90களின் துவக்கத்தில் இனம் புரியாத சோகங்களுக்கு பதின் வயதிலேயே ஆட்பட்ட தருணங்களில் 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்....' பாடலின் மூலம் தேற்றி அரவணைத்த குரல் அது எனக்கு. 2000 களின் துவக்கத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சிக்கு ஒரேயொரு மதிப்பெண் குறைவாகப் பெற்று, அரசுப் பணியை இழந்த நிலையில், மனமுடைந்து போய் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் ...