நாவல்

நொய்யல் தேவிபாரதி தன்னறம் நூல்வெளி 630 பக்கங்கள் மனித வாழ்வின் வாதைமிகு தருணங்களை ஆற்றாமைகளில் முகிழ்ந்திடும் ஏக்கங்களை, பெருந்துயர்களின் தீரா வடுக்களை கால் நூற்றாண்டாக தொடர்ந்த தனது தீவிர எழுத்துகளால் ஆவணப்படுத்தியுள்ளார் தேவிபாரதி. சற்றே விரிவுபடுத்தி எழுதியிருப்பின் தகழியின் 'கயிறு' நாவலுக்கு இணையாக வந்திருக்க வேண்டிய நூல் இது. நாவலின் துவக்கப் பக்கங்களில் நொய்யல் கரை தேவநாத்தாள், சங்கிலியங்காட்டுப் பண்ணாடி வீட்டில் தாண்டவமாடுகிறாள். தேவநாத்தாளுக்கு கோயில் எழுப்பப்படுகிறது. நொய்யல் கரையில் கிரிக் கவுண்டரின் காரிச்சியுடனான உரையாடல்கள் விவரிக்கவியலா தூய அன்பினை எடுத்தியம்புபவை. தான் வியந்து காண்பவைகளைத்தான் போலி செய்ய எண்ணுகிறார்கள் குழந்தைகள். ஆரம்பச் செயல்கள் அளித்திடும் வெற்றிகள், அவரவருக்கான பாதைகளை தீர்மானித்து விடுகின்றன. மாறாக தவறான செயல்களின்போது கிடைத்திடும் துவக்க நிலைத் தோல்விகள் கேலிக்கு ஆளாக்கும்போதும், பாதைகளை மாற்றி நல்வழிப்படுத்தி விடுகின்றன. பூபதியின் ஆளுமை இவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டுவிடுகிறது. வேம்பணக் கவுண்டர் செல்வாக்கான பண...