நாவல்
கடைசி புதிர்ப்பாதை
அருண் ஜோஷி
தமிழில் ஜி குப்புசாமி
சாகித்ய அகாடமி வெளியீடு
256 பக்கங்கள்
விலை ரூபாய் 325
பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தும் சோம்பாஸ்கர் இளம் தொழிலதிபராக தீர்க்கமான வணிகச் சிந்தனைகளுடன் வலம் வருகிறான். இளம் வயது தனிமைகள், தாயின் இறப்பு அவன் மனதின் அடுக்குகளில் ஆறாத ரணங்களாக அமைந்து விடுகின்றன.
அவன் மீதும் அவனது நிறுவனத்தின் மீதும் கேள்விக்கு உட்பட்டிராத உரிமையும் பொறுப்புகளும் நிரம்பியவராக வருகிறார் தாப்பர். உரிமையுடன் பல தருணங்களில் பாஸ்கரை அவர் கண்டிக்கவும் செய்கிறார்.
துவக்கத்தில் அல்தாஃபின் மனைவியாக அறியப்படும் அனுராதாவால் பாஸ்கர் ஈர்க்கப்படுகிறான். உண்மையில் அவளைப் போன்ற இயல்புடைய பெண்ணை பெரும்பாலான ஆண்கள் விரும்பவே செய்வார்கள். இந்நிதர்சனத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறான் அல்தாஃப்.
அல்தாஃபின் நிறுவனத்தை தன்னால் மட்டுமே வெற்றிகரமாக நடத்திச் செல்ல இயலும் என நம்பும் பாஸ்கர், அந்நிறுவனப் பங்குகளை வாங்கிக் குவிக்கிறான்.
சதுரங்க ஆட்டத்தில் திறன் வாய்ந்த அல்தாஃப், பாஸ்கர் தரும் நெருக்கடிகளை சமாளிக்க இயலாமல் தவிக்கிறான்.
அனுராதாவின் மீதான பாஸ்கரின் மையல் அளவு கடந்து செல்கையில், அவள் அல்தாஃபின் மனைவியல்ல என்ற விவரமும் தெரிய வருகிறது.
அவளது இளம் வயது சோகங்களை மருத்துவர் காஷ்யப் பாஸ்கரிடம் தெரிவிக்கிறார். அனுராதாவின் கண்ணீருடனான வேண்டுகோளையும் மீறி அல்தாஃபை வீழ்த்த முனைகிறான் பாஸ்கர்.
இயலாமையுடன் கண்ணீர் சிந்தும் அல்தாஃப், பாஸ்கரை முற்றிலும் வெறுக்கிறான். 'வேண்டும், வேண்டும்' என்ற குரல்கள் பாஸ்கரின் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
ஹவேலி புதிர்களைப் போன்றே பாஸ்கரின் சிந்தனைகளும், வாழ்வும் சிக்கல்களால் சூழ்ந்திருக்கின்றன.
காது கேளாத, வாய் பேச முடியாத கார்கி அனைவரின் நலம் விரும்பியாக அமைகிறார்.நடுநிலையுடன் அனைவர் நலனையும் விரும்புபவர்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா தரப்பினருக்கும் தேவைப்படவே செய்கிறார்கள்.
கீதா நம்பவே முடியாத பொறுமையுடன் சோம் பாஸ்கரை மாறாமல் நேசிக்கும் மனைவியாக வருகிறாள். கீதாவிற்கு நேர் எதிரான பாத்திரமாக நாவலில் வருபவர் லீலா சப்னிஸ்.
'உங்கள் மனம் மிகவும் தந்திரமானது, அது உங்களுக்கு எப்போதுமே சாத்தியமற்ற இலக்குகளையே முன்வைக்கிறது' என்ற ஓஷோவின் வரிகளை நினைவுக்கு வரவழைத்தது இந்நாவலின் வாசிப்பு.
மனித வாழ்வில் கிடைத்தவை அனைத்தும் மதிப்பிழந்தது போன்ற நிலையை அடைவதும், கிடைக்காதவை என்றும் பசுமையாக நீடிப்பது போன்றும் எண்ண வைத்து விடுகின்றன.
வணிகத் தந்திரங்களுடன் அல்தாஃபின் நிறுவனத்தை வளைக்க திட்டமிட்ட பாஸ்கருக்கு ஒரு கட்டத்தில் அனுராதாவின் மீதான வெறித்தனமான காதல் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி அவனை எங்கெங்கோ செலுத்தி விடுகிறது.
மிகக் குறைவான பாத்திரங்களுடன் பாஸ்கரின் தெளிவற்ற மனநிலையை புனைவில் அழகாக வெளிப்படுத்தி விடுகிறார் அருண் ஜோஷி. பனாரஸ் நகர வர்ணனைகளும், மலையேற்ற நிகழ்வுகளும் அவ்விடங்களுக்கு வாசகனை கொண்டு செல்ல வல்லவை.
இந்நாவலை தமிழுக்கு கொண்டு வந்திருப்பவர் ஜி குப்புசாமி, மூலப்பிரதியின் சாரத்தை முழுமையாக நமது மொழிக்கு கடத்தி விடுவதில் கடும் உழைப்பை எப்போதும் செலுத்தக் கூடியவர் அவர்.

Comments
Post a Comment