நினைவுகள்

 

பாரதி நினைவுகள்
 ம.கோ யதுகிரி அம்மாள் 
சந்தியா பதிப்பகம் 
224 பக்கங்கள் 
விலை ரூபாய் ₹150




 பாரதியின் தீர்க்க தரிசனம் மிகுந்த சிந்தனையையும், வியக்க வைக்கும் மேதைமையையும் அருகில் இருந்த காணக் கிடைக்கும் நல்லூழ் அமையப்பெற்றிருக்கிறார் யதுகிரி.

 பாரதியின் இரு மகள்களுடன் மூன்றாம் மகளாகவே செல்லம்மாவால் நடத்தப்பட்டிருக்கிறார் அவர்.

 மனைவியிடம் கடிந்து பேசும் பாரதி, யதுகிரியின் சீற்றமான கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகவே பதில் அளித்திருக்கிறார். ஆற்றாமையில் புலம்பியும் இருக்கிறார்.

 இளம் வயதில் மறைந்து விட்ட மேதைகளின் சொற்ப வாழ்நாளில் உடன் இருந்தவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள் என்பதன் அடிப்படையில் யதுகிரியின் பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு ஏதுமின்றி வாழ்ந்த பாரதி, அந்த அரிய குணத்திற்காகவே அன்றைய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருப்பதை யதுகிரியின் பார்வையில் காண முடிகிறது.

 கணவரின் துல்லியமான, நேர்மையான பேச்சாலும், நடத்தைகளாலும் பெரும் சங்கடங்களை அனுபவிக்கும் செல்லம்மா தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார்.

 சென்னையில் சங்கம் ஒன்று நடத்திய கவிதைப் போட்டிக்கு அனைவரின் வற்புறுத்தலால் தனது 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' கவிதையை அனுப்பியிருக்கிறார் பாரதி.

 அனைவரும் முதல் பரிசு எதிர் நோக்கிய நிலையில் மூன்றாம் பரிசே அக்கவிதைக்கு கிடைத்திருக்கிறது. வ.வேசு ஐயர் உள்ளிட்ட பாரதி அன்பர்கள் அனைவரும் வருந்திய போதும் பாரதி அது குறித்து கவலைப்படவே இல்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ? மேதா விலாசம் அல்லவோ அக்குணம்?

 கவி பாடும் மேதமையுடன் காலத்தைக் கடத்தும் உலகாதயங்களில் சறுக்கி பெரும் அவதியுடனே பாரதியின் நாட்கள் கழிந்துள்ளன.

 மிக இளம் வயதில் பாரதியின் அருகில் இருக்கும் வாய்ப்பைப் பெற்ற யதுகிரி, அவரது உரையாடல்களை மீட்டெடுத்து வியந்து நிற்கிறார்.

 பாரதி, செல்லம்மா, தங்கம்மா, யதுகிரி ஆகியோரிடையே நடைபெற்ற உரையாடல்கள் எழுத்து வடிவில் பல அத்தியாயங்களில் இடம்பெறுகின்றன.

 முருகேசப் பிள்ளையின் ஒரே மகன் ராஜா பகதூர் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. புத்திர சோகத்தை ஆற்றும் வகையில் பாரதி தசரத மன்னனை மேற்கோள்காட்டி முருகேசப் பிள்ளைக்கு ஆறுதல் அளிக்கிறார். துயரை கடக்க முடியாத தந்தை இறந்து போகிறார்.

 முருகேசப் பிள்ளை இறந்த பிறகு ராஜா பகதூர் அதிசயமாக உயிருடன் திரும்புகிறான்.

 பாரதியின் புதுச்சேரி வாழ்வு சவால்களுடன், வலிகளும் மிகுந்ததாகவே அமைந்திருப்பதை யதுகிரி நினைவு கூர்கிறார்.

 பாரதி அன்பர் ரா.அ.பத்மநாபனின் முன்னுரையும் இந்நூலின் சிறப்பு. கடற்கரய் மத்த விலாச அங்கதம் நூலினை மிகச் சிறப்பாக மீள்பதிப்பு செய்துள்ளார்.

 பாரதி அன்பர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நல்ல நூல் இது.

 

Comments

Popular posts from this blog

கட்டுரைகள்

நடைவழி நினைவுகள் II

நாவல்