கட்டுரைகள்
சமகாலக் கல்விச் சிந்தனைகள்
சு உமாமகேஸ்வரி
நாற்கரம் பதிப்பகம்
44 பக்கங்கள்
விலை ரூபாய் 60
கல்வி சார்ந்த பத்து சிறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். கட்டுரைகளின் அளவுதான் சிறிதே தவிர தலைப்புகள் அனைத்தும் இக்கால கல்விச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்துடன் மிக விரிவாக எழுதப்பட வேண்டியவையும் கூட.
ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்வுடன் வந்து செல்லும் இடமாக பள்ளிகள் மாறிவிட்டால் இடர்களுக்கு இடமே இல்லை. கற்றலும், கற்பித்தல் பணியும் மிகுந்த மன அழுத்தத்தை தரும் வகையில் மாறிவிட்ட தற்போதைய சூழலில் இதுபோன்ற நூல்கள் வெளிவருவதை வரவேற்றே ஆக வேண்டும்.
பாடத்திட்டம், பாடநூல்கள் குறித்த முதல் கட்டுரை கற்றலின் சுமையை அலசுகிறது உடற்கல்வி முக்கியத்துவம் குறித்து விளக்குகிறது இரண்டாம் கட்டுரை. ஆரம்பப் பள்ளிகளில் இருந்து உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுதல் மிகச் சிறந்த பயனைத் தரும் என்று தோன்றுகிறது.
ஆசிரியர்-மாணவர் தடையற்ற உரையாடலை வலியுறுத்தும் கட்டுரை ஒன்றும், அருகாமைப் பள்ளிகளின் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரையும் நூலில் இடம் பெறுகின்றன. சிறைச்சாலைகளைப் போன்ற இறுக்கமான மனநிலையை ஏற்படுத்தும் கல்வி அமைப்பையும் பள்ளிகளையும் கண்டிக்கிறார் நூலாசிரியர்.
குழந்தைகளின் மனவியலை அறிந்து ஏற்கத்தக்க சூழலில் கல்வி இலகுவாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் அக்கறை நியாயமானது. கற்பிக்கப்படும் கல்வி ஏட்டுச் சுரைக்காய் போன்றும், குமாஸ்தா கல்வியாகவும் இல்லாதிருத்தல் நிச்சயம் பலன் அளிக்கும்.
நூலாசிரியர் அரசுப் பள்ளி ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் ஆதலால், கடைநிலை பிரிவைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைய வேண்டும் என்ற விழைதல் அவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது. அரசுப் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நல்ல நூல் இது.

Comments
Post a Comment