கட்டுரைகள்

 தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் 

ச தமிழ்ச்செல்வன் 

895 பக்கங்கள் 

மக்கள் பதிப்பு விலை ரூபாய் 300

 பாரதி புத்தகாலயம் 



வ வே சு ஐயர் முதல் கந்தர்வன் வரை 52 சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் குறித்த விரிவான, ஆழமான, நடுநிலையான மதிப்பீடுகளுடன் கூடிய கட்டுரைகளின் தொகுப்பு இப்பெரு நூல். 


2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இந்நூலுக்காக தோழர் தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும், இந்நூலைப் பெரும்பான்மையான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு மக்கள் பதிப்பாக ரூபாய் 300 விலையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது என்பதும் வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவை.


 நல்ல விமர்சன நூல் ஒன்று வாசித்த படைப்புகளின் மீது அதுவரை காணாத வெளிச்சத்தை பாய்ச்சுவதோடு, வாசித்து அறியாத படைப்புகளின் மீது ஆர்வத்தையும் ஏற்படுத்த வல்லது என்று முன்பு எங்கோ வாசித்த நினைவு.


ச.தமிழ்ச்செல்வனின் இந்நூல் மேற்கண்ட கூற்றுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ளது.


ஒவ்வொரு படைப்பாளியையும் குறித்த தெளிவான விவரணையும், அவர்தம் படைப்புகளின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சமும் மிகவும் இயல்பாக, அழகாக அமைந்து விடுகின்றன.


தமிழ்ச் சிறுகதையின் முதல் 50 ஆண்டுகள் என்று குறிப்புடன் இந்நூல் வெளியாகியுள்ளதால், அடுத்த ஐம்பது ஆண்டுகள் குறித்த மற்றும் ஒரு விரிவான தொகைநூல் வரவிருப்பதை எண்ணுகையில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


 வ.வே.சு ஐயரின் பெயரைக் காணும்போதே குளத்தங்கரை அரசமரம் கண்முன் நிழலாடுகிறது. சேரன்மாதேவி குருகுலம் பற்றிய குறிப்புகளில், குழந்தைகள் உணவருந்தும் இடத்தில் பாரபட்சத்துடன் நடத்தப்பட்டதை அறிந்தபோது பெரும் வருத்தம் ஏற்படுவதுடன் ஐயரின் அகால மரணம் பெரும் சோகத்துடன் நிகழ்ந்ததை அறிந்தபோது மனம் கனக்கிறது.


ஒவ்வொரு படைப்பாளியின் சிறுகதைகளையும், கதைகளில் அமையும் பகுதிகளைக் குறிப்பிட்டு, போதாமைகளையும் நயமுடன் எழுதி இருப்பது சிறப்பு. மேதைமைகளையும் குறிப்பிட்டு போற்றத் தவறவில்லை இந்நூல்.


 முற்போக்கு இயக்கத்தில், மிகவும் கடினமான பணிச்சூழலில் கடும் நேர நெருக்கடியில் பணியாற்றும் தோழர், இப்பெருந்தொகை நூலினை இவ்வளவு நேர்த்தியுடன் எழுதியுள்ளமை வாசகனுக்கு ஆச்சரியம் அளிக்கும்.


மகாகவியாகவே அறியப்பட்ட பாரதி, சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார் என்ற தகவல் பெரும்பாலான வாசகர்களுக்கு வியப்பை அளித்திருக்கும். தமிழ்ச் சிறுகதைகளுக்கு தனித்துவமான பாதையை அமைத்த புதுமைப்பித்தனின் மேதைமை குறித்து எத்தனை எழுத்தாளர்கள் எத்தனை முறை எழுதினாலும் வாசிக்க திகட்டாதவை ஆகவே அவை விளங்கவல்லவை.


 புதுமைப்பித்தனால் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று அழைக்கப்பட்ட மௌனியின் கதைகள் குறித்த கட்டுரை அவரது நூலினை மறுவாசிப்பு செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. கு ப ராவின் மிகமிகக் குறைவான பக்கங்களில் அமைந்த, எளிய மொழியாலான சிறுகதைகளும் நினைவுகளுக்கு வந்து செல்கின்றன. மணிக்கொடி கால எழுத்தாளர்களின் மேதைமையும், சிரத்தையும் தமிழ் சிறுகதைகளின் பாதையை செப்பனிட்டதை அறிய முடிகிறது.


 சனாதனத்தில் ஆழ்ந்தவர்களாக அறியப்பட்ட கல்கி, ராஜாஜி போன்றோரின்படைப்புகளையும் புறக்கணிக்காமல் இப்பெருநூலில் இடம்பெறச் செய்துள்ளமை முற்போக்குத் தோழர்களுக்கே உரிய சிறப்பு. திராவிட இயக்க எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும், அவர்தம் படைப்புகள் குறித்த விவரணைகளும் இந்நூலின் மற்றுமொரு சிறப்பு. சிறுவயதில் அண்ணாவின் சிறுகதை ஒன்றை வாசித்த நினைவுகளை எல்லாம் கிளர்ந்தெழச் செய்துவிட்டார் தமிழ்ச்செல்வன்.


 பன்முக ஆளுமையான கலைஞரின் இலக்கியத் தகுதி பெரிதாக வாசக உலகில் உணரப்படாமலேயே போய்விட்டதை அறிய முடிகிறது. 'வலியது வாழும்' என்ற கூற்றின்படி தகுதியுள்ள படைப்பு நிச்சயம் எத்தனை ஆண்டுகள் மறைக்கப்பட்டு இருப்பினும் தனக்குரிய வாசகனை நிச்சயம் அடைந்தே தீரும்.


 இலக்கிய ஆர்வம், இல்லற வாழ்வு என பெரிதும் அலைக்கழிக்கப்பட்ட வாழ்வினையே வாழ்ந்து மறைந்த கு அழகிரிசாமியின் கதைகளைப் பற்றிய கட்டுரை அம்மேதையை கண்ணீருடன் எண்ணிப் பார்க்கச் செய்தது. மற்றுமொரு துன்பியல் கலைஞர் தி ஜ ர அவர்கள். அவரது வாழ்வின் இறுதிப் பகுதியின் துயர்கள் தமிழ் எழுத்தாளர்களுக்கேயுரிய சாபக்கேடு ஆகும்.


கிருஷ்ணன் நம்பியின் ஆக்கங்கள் என்ற நூலினை காலச்சுவடு பதிப்பகத்தில் கண்டு, வாங்காமல் தவறவிட்டதை நினைவு படுத்தியது அவரைப் பற்றிய கட்டுரை. கிண்டிலில் பழந்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கோவிட் பெருந்தொற்று காலத்தில் விலையின்றி கிடைத்தன நா சிதம்பரசுப்ரமணியனின் கதை ஒன்று அந்த நேரங்களில் வாசித்திருக்கிறேன். ஆற்றொழுக்கான தனித்த நடை கொண்ட மற்றும் ஒரு சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர் அவர்.


 'யாருடா அவாளெல்லாம்?' நான்தானே! என்று தன் மகனிடம் குறிப்பிட்ட லா ச ராவின் கதைகள் பற்றிய குறிப்புகள் அவரது கதைகளை மீண்டும் வாசிக்கும் விழைவை ஏற்படுத்தின.


 மக்கள் எழுத்தாளர் விந்தனின் மிகமிக எளிமையான வாழ்வியல் குறிப்புகளைக் கொண்ட கதைகள் வாசிப்புக்கும், சிந்தனைக்கும் புத்துணர்வு அளிக்க வல்லவை.


 தனது வாழ்வின் இரண்டாம் பகுதியில் தீவிரமாக எழுதிய மா.அரங்கநாதன் பற்றிய குறிப்புகளும் அவரது முத்துக்கறுப்பன் கதைகளும் மறக்க முடியாதவை. நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்ட மா.அரங்கநாதன் படைப்புகள் என்ற பச்சை நிற அட்டையுடன் அமைந்த பெருந்தொகை நூலினை கண்கொட்டாமல் பார்க்கச் செய்து விட்டது அக்கட்டுரை.


 மேதமை கலை அமைதியை படைப்புகளில் வெளிப்படுத்துவதுடன், அறச்சீற்றங்களையும் பல நேரங்களில் வெளிப்படுத்தி விடுகிறது. ஜி நாகராஜன் வாழ்வும் மரணமும் அளிக்கும் செய்திகள் அது போன்றவை.


 பெண் படைப்பாளிகள் குறித்த இரு கட்டுரைகளும் பெயரளவில் மட்டுமே இக்கலைஞர்களை அறிந்து வைத்துள்ளதை எண்ணி நாணச் செய்துவிட்டது. 


வாழ்விற்கு வழி ஏற்படுத்திக் கண்டு, சாலைத் தெரு கதைகளை படைத்திட்ட ஆ மாதவனும், குன்றாத கம்பீரத்துடன் வாழ்ந்த மறைந்த பெருங்கலைஞன் ஜெயகாந்தன் பற்றிய கட்டுரைகளும் மிக அழகாக மிகையின்றி எழுதப்பட்டவை.


 பெண்ணியல் மட்டுமின்றி, அத்துமீறல்கள் குறித்தும் துணிச்சலாக படைத்த கிருத்திகா, அம்பை இருவரின் எழுத்துக்களைக் குறித்த கட்டுரைகள் அவர்தம் படைப்புகளை ஆவலுடன் வாங்கி வைத்துவிட்டு, வாசிக்காமலேயே நாள்களைக் கடத்திவரும் மடிமையை உணர்த்தின.


தமிழ்ச்செல்வனுக்கு நம்மைப் போன்றே தீஜாவின் எழுத்துக்களை மிகவும் பிடிக்கும் போலும் அவருக்கு இரண்டு கட்டுரைகளை ஒதுக்கி இருக்கிறார் சாட்டையடி கொடுமையும் சாமி பால் குறித்த தகவல்களும் தஞ்சை மண் எழுத்தாளர்களின் படைப்புகளில் இடம்பெறாமல் அமைந்ததன் வருத்தத்தை பதிவு செய்யவும் தவறவில்லை அவர்.


அக்கால கட்டங்களில் நேரிடையான பேச்சிலேயே துணியப்படாத ஓரினச்சேர்க்கை போன்ற விடயங்களை தனது படைப்பில் துணிச்சலுடன் இடம்பெறச்செய்த கரிச்சான் குஞ்சு, தயக்கமும், கோழைத்தனமும் மிகுந்த கதை மாந்தர்களை எளிய மொழியில் கம்பீரமாக உலக விட்ட அசோகமித்திரன் மற்றும் அவரது புலி கலைஞன் கதை பற்றிய குறிப்பு இந்நூலின் பிற சிறப்புகள் பைத்தியக்கார பிள்ளையை படைத்த எம்.வி.வி, மருத்துவத்துறையில் பெரும் தொண்டாற்றி, இலக்கியத்திலும் அழியாத்தடம் பதித்துவிட்டு சென்றுள்ள சார்வாகன், தமிழ் உரைநடைக்கு பெரும்வளம் சேர்த்துள்ள சுந்தர ராமசாமி, நாடகக்கலையில் சாதித்ததோடு சிறுகதைகளிலும் தனது இருப்பை பதிவு செய்துவிட்டு சென்றிருக்கும் ந.முத்துசாமி, வாழ்வின் துயர்மிகுந்த நாட்களில் இலக்கியத்தின் பக்கம் கவனத்தை திருப்பிக் கொண்டு சிறுகதைகளைப் படைத்திட்ட இந்திரா பார்த்தசாரதி போன்ற ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் சிறப்பானவை.


70களின் எழுச்சியை பகுதி இரண்டில் பதிவு செய்கிறார் தோழர். அன்பின் பின்புலங்களைப் பேசும் வண்ணநிலவன், கவித்துவமான  கதைகளை படைத்திட்ட வண்ணதாசன், வட்டார மொழியில் கதைகளைப் படைத்திட்ட பூமணி, முற்போக்கு சிந்தனையுடன்  கதைகளைப் படைத்த இன்குலாப் உள்ளிட்டவர்களைப் பற்றிய கட்டுரைகள் ஆர்வமுடன் வாசிக்க முடிந்தவை.


 காலச்சுவடு இதழ்களில் வாசித்த பா. செயப்பிரகாசத்தின் கதைகளை மற்றுமொரு கட்டுரை நினைவுபடுத்தியது. ஒரு நூலின் வாசிப்பு, வாசிக்கப்படாமல் வைத்திருக்கும் பல நூல்களுக்கான திறப்பினை ஏற்படுத்துவது போன்று, பிரபஞ்சன் குறித்து இந்நூலில் எழுதப்பட்ட குறிப்புகள், அவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பு நூலினை வாசிக்கத் தேர்வு செய்தது.


 அன்றாட வாழ்வின் இயக்கங்களில் படைப்பு மொழியை தவறவிட்டுவிட்ட லிங்கன், தமிழின் மற்றபிற ஆற்றல்மிகு படைப்பாளிகள் சா.கந்தசாமி, மு.சுயம்புலிங்கம், வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டு கதைகளை படைத்த நாஞ்சில் நாடன், துணிச்சலான மற்றுமொரு கலைஞன் தஞ்சைப் பிரகாஷ், கரிசல் எழுத்தின் பிதாமகன் கி.ரா, முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் என்றவாறு இந்நூலின் விரிவும், ஆழமும் பெரும் வியப்புகளை ஏற்படுத்தியவை.


 தோழர் தமிழ்ச்செல்வனுக்கும், பாரதி புத்தகாலயத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும், வணக்கமும்!

Comments

Popular posts from this blog

நாவல்

நடைவழி நினைவுகள் II

கட்டுரைகள்